தமிழ்நாட்டில், கடந்த 35 நாள்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கள்ளச்சாராயம் காய்ச்சுவது, ஊறல் தயாரிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே அதிகரித்துவருகின்றன.
ஒரு சில இடங்களில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள தீத்திபாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகப் பொள்ளாச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எழிலரசி, காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளர்கள் சின்னகாமன், ஜான் ரேஸ் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சரவணக்குமார், செந்தில்குமார், நாகராஜ் ஆகிய மூவரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த 12 லிட்டர் ஊறலைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிந்து கோவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவிநாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கள்ளச் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது !