கோவை : ஆனைகட்டி பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த வனப்பகுதியில் யானைகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான யானைகள் மாலை, காலை நேரத்தில் அருகே உள்ள கிராம பகுதிகளுக்கு தண்ணீர் அருந்த வருவது வழக்கம்.
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை
இந்நிலையில் இன்று (ஜூலை.09) மாலை 4 மணியளவில் ஆனைகட்டி அருகே உள்ள கங்கா சேம்பர் என்ற இடத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை செங்கல் சூளையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றது. அப்போது நாய் ஒன்று யானையை பார்த்து குறைத்ததால் ஆவேசமடைந்த யானை சாலைக்கும், தண்ணீர் தொட்டிக்கும் இடையே சுற்றித் திரிந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை நிறுத்தி யானை வனப்பகுதிக்குள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்தனர். எனினும் சுமார் 20 நிமிடம் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலை ஓரத்திலேயே நின்று கொண்டிருந்ததால் கோவை ஆனைகட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்ப கோரிக்கை
சிறிது நேரத்தில் யானை வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து அந்த வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. தற்போது வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிக்குள் வருவதால் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: