கரோனா என்னும் கொடிய அரக்கன் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு வாங்கிவருகிறது. இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தமிழ்நாட்டில் நேற்று மேலும் 43 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 520 ஆக உயர்ந்தள்ளது.
கடந்த மூன்று நாள்களாக உயிரிழப்பு இல்லாத நிலையில் நேற்று இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனா பாதிக்கப்பட்ட 43 பேரில் சென்னையில் மட்டும் 18 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் மட்டும் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 303ஆக அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றுவரை யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லாத நிலையில் இன்று முதன் முறையாக ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 411லிருந்து 457 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில், கரோனா பாதிப்பிலிருந்து 46 பேர் குணம் அடைந்துள்ளனர்" என்றார்.
கோவையில் கரோனா தொற்றால் 133 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அதில், 54 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இன்று கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகள், 10 பெண்கள் உள்பட 32 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பெரியய்யா, இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களைக் பழக்கூடைகளை வழங்கி அவர்களை உற்சாகமூட்டும் வகையில் கைத்தட்டி வழியனுப்பிவைத்தனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கோவையில் இதுவரை 84 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது கரோனா தொற்றினால் சிகிச்சைப் பெற்றவர்களின் முழு ஒத்துழைப்போடு மட்டுமே சாத்தியமானது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையில் நான்காயிரம் பேரை சோதனை செய்ததில் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் ஆயிரம் பேருக்கு சோதனை செய்ததில் எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 49 பேர் மருத்துவக் கண்காணிப்பில் கிச்சையில் உள்ளனர்.
அவர்களும் விரைவில் குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்கள். கோவை மாவட்டம் 100 விழுக்காடு கரோனா நோய்த் தொற்று இல்லா மாவட்டமாக இருப்பதற்கு மக்கள் முழுமையாக அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இப்போது இல்லையெனில் இனி எப்போதுமே இல்லை!