கோவை: தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் சீர்த்திருத்த பணிகள் சார்பில் கோவை மத்திய சிறையில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணியை இன்று (நவ. 16) சிறைத்துறை காவல்துறை மண்டல துணைத்தலைவர் தொடங்கிவைத்தார்.
கோவை காட்டூர் பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறை வளாகத்தில் அரை ஏக்கர் பரப்பளவிற்கு மூலிகைத் தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கற்றாழை, முடக்கத்தான், மருதாணி, சீந்தில், ரணகள்ளி, நீர்ப்பிரமி உள்ளிட்ட 40 வகையான மூலிகைகளை நட்டுவைத்து கைதிகள் பராமரித்து வளர்க்க உள்ளனர்.
இவ்வாறு வளர்க்கப்படும் மூலிகை செடிகளில் இருந்து மருந்துகள் தயாரித்து வழங்கப்படும் என்று சிறைத்துறை காவல்துறை மண்டல துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
மேலும், சிறை வளாகத்தில் அமைக்கபட்டுள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் முயல்களின் விற்பனையையும் காவல்துறை மண்டல துணைத்தலைவர் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்துப் பேசிய அவர்,
"இரண்டு முயல்கள் ரூ. 500க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், காடை முட்டைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தலின் படி கரோனா தடுப்பு, பாதுகாப்பு பணிகள் சிறைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. சிறை வளாகத்தில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். நாள் ஒன்றிற்கு ஐந்து முறை கைகளை கழுவ வேண்டும். உணவு உண்ணும் போது கைதிகள் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் வழங்கபட்டுள்ளன".
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைதொடர்ந்து சிறைத்துறை வளாகத்தில் அமைக்கபட்டுள்ள மீன் பண்ணையினையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: ’சிறைச்சாலைகள் அறச்சாலைகளாக மாற கல்வியே கருவி’