கோவை சித்தாபுதூர் பகுதியில் தனவர்ஷா டூர்ஸ் & டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை சுரேஷ்குமார் என்பவரும், அவரது மனைவி மகேஸ்வரியும் நடத்தி வந்தனர். இந்த நிறுவனம் சுற்றுலா திட்டங்கள் மூலம் சீரடி, கோவா, மும்பை, அந்தமான் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற பல வெளிநாடுகளுக்கும் செல்வதற்காக சலுகை கட்டணங்களை அறிவித்தது.
குறிப்பாக பயணத்திற்கு சில மாதம் முன்னதாகவே டிக்கெட் புக் செய்தால் சலுகைகள் கொடுக்கப்படும் என அறிவித்தது. இதனையடுத்து ஏராளமானோர் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா செல்வதற்காக இந்த நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்திருந்தனர்.
இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி திடீரென மூடப்பட்டது. நிறுவன உரிமையாளர்களான சுரேஷ்குமார், மகேஸ்வரி ஆகியோர் தலைமறைவாகினர். பின்னர், இந்த நிறுவனத்தில் பணம் கட்டி டிக்கெட் புக் செய்த 600க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர குற்றவியல் பிரிவில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் மொத்தம் ரூ. 10 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சுரேஷ்குமார் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினர் தேடி வந்தனர். கணவன், மனைவி இருவரும் தலைமறைவான நிலையில், வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதனையடுத்து கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தலைமறைவாக இருந்தபோது சுரேஷ்குமார் , அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தனிப்படையினர், இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பேனர் தடை அமலில் இருக்கும்போது அமைச்சருக்கு பிளக்ஸ் வைத்த அதிமுகவினர்