தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ''தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரிசோதனைகள் வேகமாக நடந்து வருகின்றன. அரசின் உத்தரவுபடி கோவையில் அனைத்து துறைகளையும் இணைத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் இதுவரை 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 54 பேர் வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சியில் 10 இடங்களும் ஊரகப் பகுதிகளில் எட்டு இடங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது வரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வந்தால் அவர்களுக்கு உடனடியாக சோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறோம்.
கோவைக்கு 2,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வரவழைக்கப்பட்டு, அதில் ஆயிரம் கிட்களை பயன்படுத்தியுள்ளோம். அதில் எட்டு பேருக்கு மட்டும் கரோனா வைரஸ் உறுதியானதில், அடுத்தக் கட்ட சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி மேலும் 1000 ராபிட் டெஸ்ட் கிட்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஆனைமலை, பொள்ளாச்சி, மதுக்கரை, போன்ற இடங்களிலும் அந்தக் கருவிகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக இன்று கோவை பத்திரிக்கையாளர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சோதனை செய்ய முடிவு செய்துள்ளோம். மக்களும் ஊரடங்கு உத்தரவு எதற்காக அமல்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்து கொண்டு வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இ பாஸ் இணையத்திலேயே வழங்கப்படுகிறது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவிட்-19 தாக்கம்: பணியாளர் தேர்வு, சம்பள உயர்வு, பதவி உயர்வு என அனைத்தும் நிறுத்திவைப்பு!