கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் ஊரடங்கு போடப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கோயம்புத்தூரில் நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரிப்பதால் கொடிசியா டி ஹால், பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியானது போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போடும் 15 மொபைல் வாகனங்களை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் இன்று (ஏப். 12) தொடக்கி வைத்தார்.
பின்னர் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "மக்களை தேடிச்சென்று தடுப்பூசி போடும் விதமாக இந்த நடமாடும் வாகனங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் 10 ஆயிரம் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக 5 ஆயிரம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது 10 ஆயிரம் என்ற இலக்கை எட்டுவதற்காக இந்த வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதிகள், வர்த்தக நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் ஒரு நாளுக்கு முன்பே தகவல் அளிக்கப்பட்டு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளாக வணிக நிறுவனங்களில் 50 விழுக்காடு ஊழியர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராதம் செலுத்த முடியாத மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி எச்சரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக இருக்கும் பொருட்டு தொற்று பரவுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
எனவே மக்கள் அனைவரும் தாமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிக்கொள்ள வேண்டும். கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களுக்கு இலவச சேவை எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், பொது மக்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் பயணிகளை அனுமதித்தால் 500 ரூபாய் வசூலிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: அதிமுகதான் அரக்கோணம் கொலைகளைச் செய்தது - வேல்முருகன்