தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்ததையடுத்து அரசு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், நேற்று (ஜூலை.5) முதல் கோயம்புத்தூரில் இருந்து தமிழ்நாடு - கேரள எல்லையான வாளையார்வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வாளையாரில் இறங்கும் பயணிகள், சற்று தூரம் நடந்து கேரள மாநில எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் அரசு பேருந்துகளில் ஏறி பாலக்காடு செல்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு செல்பவர்கள் கட்டாயம் இ-பதிவு செய்திருக்க வேண்டும். அதேபோல் கரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழையும் பயணிகள் சோதனை சாவடியில் இருக்கும் கேரளா காவல் துறையினரிடம் காண்பிக்க வேண்டும். இதை சரிபார்த்த பின்பு காவல் துறையினர் பேருந்து ஏற பயணிகளை அனுமதிக்கின்றனர்.
இ-பதிவு, கரோனா பரிசோதனை செய்யாமல் வரும் பயணிகளின் வசதிக்காக சோதனை சாவடியில் அதற்கான ஏற்பாடுகளை கேரள அரசு செய்துள்ளது. அதேபோல் கேரளாவிலிருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்றாலும் தமிழ்நாடு காவல் துறையினர் இதனை சரிவர பார்ப்பது இல்லை.
தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து தொடங்கியதில் இருந்து கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் கோயம்புத்தூருக்கு எந்தவித பரிசோதனைகளும் இல்லாமல் வந்து செல்கின்றனர். இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கேரளாவை போலவே தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.