கோயம்புத்தூர் செல்வபுரம் அருகேயுள்ள சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமில் பரிசோதனை செய்தார். ஆகஸ்ட் 30ஆம் தேதி அவரின் அலைபேசியில் தொடர்பு கொண்ட மாநகராட்சி அலுவலர்கள், கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரவீன்குமார் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
ஏற்கனவே பிரவீன்குமார் தனியார் ஆய்வகத்திலும் கரோனா பரிசோதனை செய்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி கரோனா தொற்று இல்லை என முடிவு வந்தது. பின்னர், மாநகராட்சி அலுவலர்களிடம் தனக்கு கரோனா தொற்று இல்லை என பிரவீன்குமார் தெரிவித்தார். அதற்கு அலுவலர்கள் மாநகராட்சி சார்பில் எடுத்த பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட நாட்கள் மருத்துவமனையில் தங்குமாறு அறிவுறுத்தினர்.
இது குறித்து பிரவீன்குமார் கூறுகையில், "அரசு, தனியார் கரோனா பரிசோதனையில் முடிவுகள் மாறுபட்டு வந்துள்ளதால் எதை நம்புவது என தெரியவில்லை. தற்போது கரோனா நோயாளிகளுடன் தங்கியிருப்பதால் நோய்த் தொற்று இல்லை என்றாலும் வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே, என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நகரங்களைவிட கிராமங்களில் வேகமெடுக்கும் கரோனா பரவல்!