பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியிலுள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொற்று காரணமாக நீலா என்ற பெண் சிங்கம் இறந்ததை அடுத்து வனவிலங்குகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமிலுள்ள 28 யானைகளுக்கு கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் மருத்துவக் குழு, கரோனா பரிசோதனை மேற்கொண்டது.
இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். கால்நடை மருத்துவர்கள் யானைகளிடமிருந்து தும்பிக்கையில் இருந்து உமிழ்நீர் மற்றும் ஆசனவாயில் இருந்து எச்சம் ஆகியவற்றை எடுத்து, அந்த மாதிரிகள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வன உயிரின மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இதன் முடிவுகள் நேற்று(ஜுன் 15) வெளியானது. அதில் 28 யானைகளுக்கும் கரோனா தொற்று இல்லையென வனத்துறையினர் தெரிவித்தனர்.