உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனோ நோய்த் தொற்றால் இதுவரை 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடிய நோய்த் தொற்றால் இந்தியாவில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள நிலையில், தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கரோனா நிவாரண நிதியாக 13 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தற்போது வரை வெறும் 510 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு கொடுத்துள்ளது.
இதனைக் கண்டிக்கும் வகையில் பொள்ளாச்சி அருகேயுள்ள காளியப்பகவுண்டன் புதூர் கிராமத்தில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து வீட்டு வாசல்களில் கண்டன பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தி.கவினர் கூறுகையில், "கரோனா நோய்த் தொற்று இந்தியாவில் வெளிப்பட்டதிலிருந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆக்கப்பூர்வமான அறிவியல் பூர்வமான எதையும் சொல்லவில்லை. மாறாக மூடத்தனமான செயல்களை உணர்ச்சி பூர்வமாக செய்துகொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கின்ற வகையில் மத்திய அரசு நடந்துகொள்கிறது. இதற்கிடையில், சுகாதாரத்துறை ஆர்டர் செய்த மருத்துவ உபகரணங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனைத் திராவிடர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:'ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்' - அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்