கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால், அங்கு வரும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் என அனைவருக்கும் கை அலம்பும் கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு கை கழுவிய பின்னே, அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அங்கு வந்த வாகனங்களுக்கும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி, "முதலமைச்சரின் உத்தரவின்பேரில் கோவை முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து வரும் பொதுமக்களிடமும் சோதனைகள் நடத்தப்படுகின்றன. கோவை விமான நிலையத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு அங்கு அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், கேரளா எல்லையோர திரையரங்குகள் மூடப்பட்டுவரும் நிலையில், கோவை மாநகரிலும் உள்ள திரையரங்குகள், மால்கள் உள்ளிட்டவற்றை மூட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், கேரளாவிலிருந்து இங்கு படித்துவரும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்லூரி விடுதியிலேயே முடிந்தவரை தங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் கூறினார்.
மேலும் மாவட்டம் முழுவதும் போதுமானவரை கிருமி நாசினிகள் வழங்கப்பட நடவடிக்கைகளை எடுத்துவருவதாகச் சொன்ன ராஜாமணி, அதைப் பயன்படுத்தி யாரேனும் அதிக விலையில் கிருமி நாசினிகள் விற்றால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க:கொரோனா பீதி: சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்க்க தடை!