தமிழ்நாடு - கேரளா எல்லையான வாளையாறு பகுதியில், கேரள மாநிலத்திலிருந்து வரும் பயணிகளிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்புகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்க விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்காணிக்கப்பட்டுவந்த 183 வெளிநாட்டு பயணிகளில் இதுவரை 56 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 127 பேர் அவர்களின் வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழக-கேரள எல்லையில் 24 மணி நேரமும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்காக 10 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
சுய உதவிக் குழுக்கள் மூலமாகக் குறைந்த விலையில் முகக்கவசம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர் முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்கள் காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சமூகவலைதளங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19 முன்னெச்சரிக்கை: கை கழுவும் பழக்கத்தை தொடங்குங்கள்