கோவை தொழிலதிபரான சம்பத், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் கோயம்புத்தூர் காந்தி பார்க் சலீவன் வீதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க தனிமனித இடைவெளி வேண்டுமெனவும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், கடந்த மாதம் தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் காரணமாக 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், சம்பத் தனது குடும்பத்துடன் கோவையை அடுத்த ஆலந்துறை பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு செல்ல முடிவு செய்தார்.
அடிப்படை தேவைக்கான பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு தனது குடும்பத்துடன் குடியேறினார். அங்கு தார்ப்பாய் மூலம் டென்ட் அமைத்து தோட்டத்தில் வசித்து வருகிறார். தங்கள் குடும்பத்தை தனிமைப்படுத்திக் கொண்டு தோட்டத்தில் பணிபுரியும் வேலையாட்களுக்கு விடுமுறை அளித்துவிட்டு அங்கு் தங்கியுள்ளனர்.
இதுகுறித்து சம்பத் கூறுகையில், “நாங்கள் வசித்து வந்த கோவை சலீவன் வீதி மக்கள் நெருக்கடியான பகுதி என்பதால், அங்கிருந்து தோட்டத்திற்கு செல்ல முடிவு செய்து குடும்பத்துடன் இங்கு வந்து தங்கியுள்ளோம். கடந்த 23ஆம் தேதி முதல் தோட்டத்தில் வசித்து வருகிறோம்.
மக்கள் நெருக்கடியில் வசித்துவந்த எங்களுக்கு இந்த இடம் வித்தியாசமான அனுபவத்தை தந்துள்ளது. மேலும் தோட்டத்தில் வேலை செய்து வந்த வேலையாட்களுக்கு விடுமுறை அளித்துவிட்டு தோட்ட பணிகளை நாங்களே செய்து கொள்கிறோம். தற்போது செல்போன்கள் மிக அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்” எனக் கூறினார்.
சம்பத்தின் மனைவி மணிமேகலை கூறுகையில், “நகரத்தில் இருக்கும்போது வீட்டுவேலை தொலைக்காட்சி பார்ப்பது என நாட்கள் கடந்து வந்த நிலையில், தற்போது தோட்டத்தில் வசித்து வருவது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. தோட்டத்தில் பணிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பதால் நேரம் போவதே தெரியவில்லை. சொல்லப்போனால் எங்களுக்கு நேரம் போதவில்லை” என்றார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டிற்கு ஏன் அதிக நிதி ஒதுக்கவில்லை? - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு