கோவை மாவட்டம் வால்பாறையில் புதிய மார்க்கெட் பகுதியில் வால்பாறை நகராட்சியால் அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த உணவகத்தின் மூலம் காலை, மதியம் என இருவேளையும் 500க்கும் மேற்பட்டவர்கள் உணவருந்தி வருகிறார்கள். இந்த உணவகத்தை கண்காணிக்கும் பொறுப்பில் நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில், அங்கு நடத்தப்பட்ட கரோனா சோதனையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அவர் பணியாற்றி வந்த அம்மா உணவத்தை நகராட்சி நிர்வாகம் மூடி சீல் வைத்துள்ளது. மேலும் உணவகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.