கோவை: தமிழக பாஜகவின் தொழிற்பிரிவு துணைத் தலைவராக இருந்து வருபவர் செல்வகுமார். இவர் கோவை காளப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவர் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பதிவுகளை பதிவிட்டதாக கூறி, கோவை கணபதிபுதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பாஜக மாநில தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமாரை சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று(ஏப்.12) காலை கைது செய்தனர். செல்வகுமார் மீது, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் பதிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு, செல்வகுமாரை வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பாஜக பிரமுகர் செல்வகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பாஜகவினர் பலரும் ட்விட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே செல்வக்குமார் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்து கூற நிர்மல்குமாருக்கு தடை!