கோவை: பொள்ளாச்சி அருகே கரட்டுமடத்தில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள செஸ் வரி ரத்து செய்யப்பட வேண்டும், தென்னை மரங்களில் நோய்த் தாக்குதல், விவசாயப் பணிகளுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தேங்காய் பறிப்பது, மட்டை உரிப்பது போன்ற தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கூலி அதிகமாக உள்ளது; தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்தாலும் அதே கூலியைத் தருவது சிரமமாக உள்ளது; மேலும் செஸ் வரி விவசாயிகளுக்கு கூடுதல் பாரமாக உள்ளதால் அதனை உடனடியாக நீக்க வேண்டும்; விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கான கூலி தொடர்பாக விவசாயிகள், வியாபாரிகள், மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருடனான முத்தரப்பு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும்; விவசாய விளைப் பொருட்களுக்கு விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்யும் நிலையினை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தினர்.
தமிழ்நாடு தேங்காய் வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் பட்டீஸ்வரன், கோவை மாவட்ட தலைவர் சண்முகம், பொருளாளர் மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி பால தண்டபாணி, உடுக்கம்பாளையம் பரமசிவம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் குலோத்துங்கன், கோவிந்தராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வால்பாறையில் அரசு பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலி!