கோவை: கொடிசியா வளாகத்தில் வரும் 12-ம் தேதி கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் விதமாகவும் மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார், "கட்டுமான தொழில் மற்றும் மனைத் தொழில் என்பது நாட்டின் அடிப்படையான கட்டமைப்பை மேற்கொள்ளக்கூடிய மிக முக்கியமான தொழில். விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெருவாரியான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய தொழில்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கக்கூடிய இந்த தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக இத்தொழில் சார்ந்த அனைத்து பங்குதாரர்களையும் இணைத்து அரசியல் சார்பற்ற "கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு" என்ற அமைப்பை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். இது ஒரு தொழில் பாதுகாப்பு கூட்டமைப்பு. இந்த தொழிலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உண்டு.
குறிப்பாக, இந்த தொழிலில் ஏற்படுகின்ற பிரச்னைகளுக்கு ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும். ஜிஎஸ்டி-யை அடியோடு ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளுக்காக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பல்வேறு பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. அதில் சிலவற்றிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தங்களின் முயற்சியால் மணல் எடுப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், மேலும் தனியார் நிலங்களிலும் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தரமான 'எம் சாண்ட்' மணலை பயன்படுத்துவதற்கு அரசு ஊக்குவிக்க வேண்டும். வரும் 12ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் தொழில் சார்ந்த அமைப்பின் பிரதிநிதிகள் என சுமார் 5,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானத் தொழிலுக்கு அத்தியாவசியமானதை முடக்குகின்ற அளவில் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
எனவே, சுற்றுச்சூழலையும், தொழிலையும் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சிலர் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூட மணலை எடுப்பதற்கு விடாமல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது கட்டுமானத் தொழிலை பாதிக்கும். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கிறது. “அனைவருக்கும் இல்லம்’’ என்ற இலக்கினை வைத்து மத்திய அரசும், மாநில அரசும் செயல்பட்டு வரும் நிலையில், வீடு கட்டுவதற்கான சூழ்நிலையையும் உருவாக்கித் தர வேண்டும்" என்றார்.