கோயம்புத்தூர்: மாவட்டம் தடாகம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கனிம வளங்கள் அதிகமாக சுரண்டப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் செங்கல் சூளைகள் இயங்கவும் அப்பகுதியில் மண் எடுக்கவும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மண் பாண்டங்கள் செய்வதற்காக குறிப்பிட்ட அளவு மண் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தடாகம் அடுத்துள்ள மாங்கரை பகுதியில் செங்கல் சூளைகள் இயங்கியபோது அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால், பெரும் பள்ளங்கள் உருவாகின. தற்போது அதனை சமன் செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது.
கனிம வளம் கொள்ளை
இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதாவது இதுபோன்று சமன் செய்யப்பட்டுவிட்டால் அலுவலர்கள் யாரேனும் வரும்போது கனிமவள கொள்ளை நடைபெற்றது மறைக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கணேஷ், "தடாகம் வீரபாண்டி வருவாய் கிராமத்தில் கனரக வாகனங்களை கொண்டு கனிம வளங்கள் சுரண்டியதை மறைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
சமூக ஆர்வலர்கள் கண்டனம்
இதுகுறித்து வருவாய் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளோம். கனிம வள கொள்ளையை 100 பேர் கொண்ட கும்பல் செய்து வருகிறது. இது தொடர்ந்து நடைபெற்றால் இந்த பகுதி பாலைவனமாகி விடும். ஆகவே, முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிக்கலாம்