கோயம்புத்தூர்: சாய்பாபா காலனி கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், நரேஷ் கார்த்திக் - காயத்ரி தம்பதியினர். காயத்ரி கோவை ரயில்வே அலுவலகத்தில் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு வில்மா(4) என்ற பெண் குழந்தை உள்ளது. தங்களது குழந்தையை சாதி, மதத்திற்குள் சேர்க்காமல் வளர்க்க வேண்டுமென இருவரும் வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது பள்ளியில் சாதி, மதமில்லை என சான்றிதழ் வழங்க கோரி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சாதி இல்லை, மதமும் இல்லை என்ற சான்றிதழுக்காக நோட்டரி கடிதத்துடன் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்துள்ளனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியரிடமும் இது குறித்து தெரிவித்து, இந்த சான்றிதழ் எடுப்பதால் அரசு சார்பில் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் எந்தவித சலுகைகளையும் கோரமாட்டேன் என்ற உறுதிமொழி அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கோவை வடக்கு வட்டாட்சியர் மூலம் நரேஷ் கார்த்திக் - காயத்ரி தம்பதியினரின் குழந்தை வில்மாவிற்கு எந்த சாதிப் பிரிவையும் சாராதவர் எனவும்; எந்த மதப்பிரிவினரையும் சாராதவர் எனவும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு சான்றிதழ் பெறலாம் எனவும் பலருக்கும் தெரியவந்துள்ளது. குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் என சான்றிதழ் பெற்ற நரேஷ் கார்த்திக் - காயத்ரி தம்பதியினருக்கு சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: 'நாய்களுக்கு சங்கிலி போல்தான் பெண்களுக்கு தாலி'- சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட தம்பதி பேச்சு!