கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம் ஊராட்சிகளில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நிவர் புயலால் கடலூர், நாகை, செங்கல்பட்டு, பெரம்பலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மாடுகள், வெள்ளாடுகள் உள்ளிட்ட 3,906 கால்நடைகளும், அதேபோல், 30 ஆயிரத்து 501 கோழிகள் உயிரிழந்துள்ளன. அதன் உரிமையாளர்களுக்கு 90 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
மழையால், பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க 563 சிறப்பு கால்நடை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மழைப்பொழிவு மாவட்டங்களில் 39,289 கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும், 47, 525 கிலோ சத்துக்கலவைகள் அவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப் படி கால்நடைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: பாதுகாப்பாக வாழத்தானே வீடு கேட்கிறார்கள் பழங்குடியின மக்கள்... காப்பாற்றுமா அரசு?