குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து கோவையில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் முன்னின்று போராட்டங்களை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முழக்கங்கள் எழுப்பினர்.
இதனிடையே கோவை விமான நிலையத்திலலிருந்து பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி வழியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செல்வதால் அங்கு காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டது. ஆளுநர் கல்லூரியைக் கடந்தவுடன் மாணவர்களிடம் காவல் துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் மாணவர்கள் போராட்டத்தை நிறைவு செய்தனர்.
இதேபோல் கோவை அரசுக் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கல்லூரியின் உள்ளே போராட்டம் நடத்தினர். அதேபோல் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் இருந்தபோது இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை எழவில்லை' - அழகிரி