திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மரியம் ஸ்டீபன் ராஜ் என்பவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று உழைப்பாளர் தின விடுமுறை என்பதால், அவர் தனது நண்பர்களுடன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
அப்போது அணைப்பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நீரில் ஸ்டீபன்ராஜ் மூழ்கினார். நண்பர்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி, இறந்த நிலையில் மரியம் உடலை மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழியார் காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது ஆழியார் அணை பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பு வேலிகள் அமைத்து இருந்தும் அதையும் மீறி சுற்றுலாவுக்கு வரும் பொதுமக்கள் குளிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள அபாய சூழல் தெரியாமல் குளிப்பதால், தொடர்ந்து உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்துவருகிறது. எனவே விடுமுறை நாட்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.