கோயம்புத்தூர் மாவட்டம், கரும்புக் கடை பூங்கா நகரைச் சேர்ந்தவர் தௌபிக். இவர், பணிக்குச் செல்லாமல் வீட்டில் அடிக்கடி சண்டையிடுவதோடு, செலவுக்கு பணம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவருக்கு கஞ்சா பழக்கமும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தெளபிக் மீது கஞ்சா வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. ரம்ஜான் பண்டிகை தினத்தன்று, வீட்டில் வழக்கம்போல் செலவுக்குப் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பணம் தராததால் ஆத்திரமடைந்த அவர் அருகிலிருந்த தனது அண்ணன் ஜாகிர் உசேனின் கைப்பேசியை பிடுங்கி வீசியுள்ளார்.
தெளபிக்கின் இந்தச் செயலை அவரது தாய், சகோதரியும் கண்டித்துள்ளனர். இதில் மேலும் ஆத்திரமடைந்த தௌபிக், தாய், சகோதரியை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதைக் கண்ட தெளபிக்கின் அண்னன் ஜாகிர் உசேன், அருகிலிருந்த கத்தியை எடுத்து தெளபிக்கை குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த தௌபிக்கை, அருகிலிருந்தவர்கள் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த கோவை போத்தனூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று முதல்கட்ட விசாரணை நடத்தினர்.
விசாரணை நடந்துவரும் நிலையில், நேற்று(மே.15) சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் தெளபிக் உயிரிழந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பியைக் கத்தியால் குத்திய ஜாகிர் உசேனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: இன்று முதல் அமலுக்கு வருகிறது ஆவின் பால் விலை குறைப்பு!