கோயம்புத்தூர்: மாநகரில் பல்வேறு இடங்களில் வலி நிவாரண மாத்திரைகளை போதை சுகத்துக்காக தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றும் வகையில் மாத்திரைகளை இளைஞர்களுக்கு, மர்மநபர்கள் சிலர் விற்பனை செய்து வருவதாகவும், இதை இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்துவதாகவும் மாநகர காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து போதை கும்பலைப் பிடிக்க காவல்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
இளைஞர்களின் வைரல் வீடியோ
இந்நிலையில் நேற்று (ஜூலை 8) இளைஞர்கள் சிலர் கும்பலாக அமர்ந்து உடலில் போதை ஊசி செலுத்திக் கொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
அந்த வீடியோ உக்கடம் புல்லுக்காடு அருகே, இரவு நேரத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தகாத வார்த்தைகளை பேசி, வலி நிவாரண மாத்திரையை தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் எடுத்து, கையில் போதை சுகத்துக்காக செலுத்திக் கொள்கின்றனர்.
இதை அவர்களுடன் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தனிப்படைகள் அமைப்பு
இதுதொடர்பாக காவல்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, "இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்யும் கும்பலைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் அமர்ந்து ரகளை செய்த போதை ஆசாமி