கோவை மாவட்டம் ராமநாதபுரம், எஸ்.என்.வி. கார்டன் பகுதியில் வசித்துவருபவர் தண்டபாணி (56). ஒர்க் ஷாப் உரிமையாளரான இவர் தனது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில் தண்டபாணி தொழில்நிமித்தமாக வெளியூர் சென்றநிலையில் நேற்று அவரது மனைவி, குடும்பத்தார் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில் நள்ளிரவில் வீடு திரும்பிய தண்டபாணி, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கை அறையிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ஐந்து ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்பட ஐந்து லட்சம் மதிப்பிலான பொருள்கள் காணாமல்போனது தெரியவந்தது.
இது குறித்து ராமநாதபுரம் காவல் துறையினருக்குத் தகவலளித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மோப்ப நாய், கைரேகை நிபுணர்களைக் கொண்டு தடயங்களைச் சேகரித்துவருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் ஆய்வு செய்துவரும் காவல் துறையினர், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகளா? அல்லது வேறு நபர்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மண்ணுள்ளி, கலசம்... சதுரங்க வேட்டை பாணியில் சுற்றித்திரியும் பாதரச மோசடி கும்பல்!