கோயம்புத்தூர்: கோவையில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சிறப்பு ஜூனியர் உதவி காவலர் (JAP- spcial Juvenile aided police) பிரிவில் நஸ்ரியா என்பவர் பணியாற்றி வந்தார். திருநங்கையான இவருக்கு காவல் உயர் அதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்தல் தருவதாகவும், சாதி ரீதியாக கொச்சைப்படுத்திப் பேசுவதாகவும் கூறி அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகர காவல் ஆணையாளரிடம் இன்று (மார்ச் 18) வழங்கினார்.
இதற்காக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு நஸ்ரியா வந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நஸ்ரியா, “கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நான் கோவையில் பணியாற்றி வருகிறேன். ஒரு வருடம் ஆயுதப்படை காவலில் பணியாற்றி, அதன் பின்பு ஜேஏபியில் பணியாற்றி வருகிறேன். நான் பணியாற்றும்போது பல்வேறு விஷயங்கள் தவறாக நடைபெற்று வந்தது. குறிப்பாக, எனது பாலினத்தைக் குறிப்பிட்டு ஒரு சிலர் இழிவாகப் பேசி வந்தனர்.
இதற்கு முன்பே நான்கைந்து முறை மாநகர காவல் ஆணையாளரை பார்க்க வந்தபோது என்னைத் தடுத்து விட்டனர். பல்வேறு இடங்களில் எனக்கு பாலியல் துன்புறுத்தல்கள் தரப்பட்டது. இதற்கு முன்பே ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்தபோது, இது போன்ற துன்புறுத்தல்கள் எனக்கு தரப்பட்டது. அப்போது தற்கொலைக்கு முயற்சி செய்தேன். தற்போது கோவையில் பணியாற்றும்போது, எனது உயர் அதிகாரியான ஆய்வாளர் மீனாம்பிகை எனது பாலினத்தை குறிப்பிட்டும், எனது சாதியைக் குறிப்பிட்டும் பேசினார்.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் தெரிவித்த பிறகு, காவல் ஆணையர் சம்பந்தப்பட்ட ஆய்வாளரை அழைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து அவர்களது அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. என்னைத் தொடர்ந்து அவர்கள் துன்புறுத்துகிறார்கள். அடுத்தடுத்து வேலைகள் கொடுத்து துன்புறுத்தி வருகிறார்கள். மெண்டல் டார்ச்சர் அளிக்கிறார்கள். எனவே இதற்கு மேல் இந்தப் பணியில் என்னால் இருக்க முடியாது.
எனவே எனது வேலையை ராஜினாமா செய்வதாக முடிவு எடுத்துள்ளேன். என்னைப் போன்றவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பணிக்கு வந்த நிலையில், இது போன்ற துன்புறுத்தல்களால் என்னால் இந்தப் பணியை இனிமேல் தொடர இயலாது. எனது ராஜினாமா கடிதத்தை காவல் ஆணையரிடம் அளிக்க உள்ளேன்” என தெரிவித்தார். இந்த நிலையில் இது குறித்து துணை ஆணையர் சந்தீஸ் விசாரணை மேற்கொள்வார் எனவும், மேலும் ஒரே முறையில் இது தொடர்பாக விசாரிக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் காவலர்களின் பொன் விழா ஆண்டு: 'அவள்' திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்; அதன் சிறப்புகள் தெரியுமா?