கோயம்புத்தூர்: மிக்ஜாம் புயல் காரணமாக இன்று (டிச.04) சென்னையில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தொடர் மழை காரணமாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கடற்கரையோர பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், புயலின் காரணமாகச் சென்னையில் பள்ளி கல்லூரிகள் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு, பொதுமக்களும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வியாசர்பாடி இடையே உள்ள ரயில் பாலத்தில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கி நிற்பதால் கோவை - சென்னை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் இன்று காலை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்த சென்னை செல்லும் பயணிகள் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கிய நண்பனைக் காப்பாற்றச் சென்ற அண்ணன் தம்பி பலி..! தாய், நண்பனுக்கு தீவிர சிகிச்சை..