கோவை: கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் 177 செங்கல் சூளைகள், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஒரு ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. கனிம வளத் திருட்டில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திற்கு இழப்பீடு ஏற்படுத்தியதற்காக செங்கல் சூளை உரிமையாளர்கள் 433 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தனர்.
இதனிடையே கடந்த டிசம்பர் 29ஆம் தேதி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் ஜெயகாந்தன் ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 433 கோடி ரூபாயை தவிர்த்து, 13.10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தி, வேக வைத்த மற்றும் பச்சை செங்கற்களை எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.
செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சுரங்கத்துறை ஆணையருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தடாகம் இயற்கை பாதுகாப்பு உறுப்பினர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. சூளை உரிமையாளர்கள் செங்கல் எடுக்கவும் தடை விதித்தது.
இந்த நிலையில், தடையை மீறி 1,500 லாரிகளில் பச்சை மற்றும் வேக வைத்த செங்கற்கள் எடுத்துச்செல்லப்பட்டு விற்கப்பட்டதாக தடாகம் பள்ளத்தாக்குப் பாதுகாப்புக் குழுவினர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் புகாரில் இணைத்துள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் செங்கல் சூளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் இதுகுறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சேது சமுத்திரம் திட்டத்தை கைவிடுங்கள் - பூவுலகின் நண்பர்கள் அரசுக்கு கோரிக்கை