கோயம்புத்தூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று மதுக்கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் ஓதிமலை சாலையில் செயல்படக்கூடிய டாஸ்மாக் பாரின் முன்பக்க கதவை மூடி விட்டு, பின்பக்கமாக மதுபானத்தை இரு மடங்கு விலை உயர்த்தி விற்பனையைக் கல்லா கட்டினர்.
வழக்கமான நாட்களில் விற்கும் அதே மது பாட்டில்களை டாஸ்மாக் விற்பனை கடையிலிருந்து நேற்று இரவே வாங்கி வைத்துக் கொண்டு, இன்று காலை முதல் உச்சபட்ச விலையை வைத்து மது பாட்டில்களை விற்றனர். டாஸ்மாக் பார்களில் இதற்கென பிரத்தியேக வழி ஏற்படுத்தி மது வாங்க வரும் மது பிரியர்களுக்குத் தங்கு தடை இன்றி மது பாட்டில்களை விற்பனை செய்தனர்.
மற்ற நாட்களில் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யக் கூடிய மதுபாட்டிலை இன்று டாஸ்மாக் கடைகள் அடைப்பு என்பதால் 220 ரூபாய்க்கும், அதைவிடக் கூடுதல் விலைக்கும் விற்பனை செய்தனர். இதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் பணியாற்றக்கூடிய டாஸ்மாக் ஊழியர்கள் ஏற்கனவே பார் நடத்தக்கூடிய நபர்களுக்கு மதுவை நேற்று மொத்தமாக விற்பனை செய்துள்ளனர்.
இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், இந்த டாஸ்மாக் பார் ஏற்கனவே உரிமம் காலாவதி ஆகிய நிலையில், அவர்களே தற்போதும் அந்த பார்களில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை வைத்து இந்த விற்பனையை அரங்கேற்றி வருவது அதைவிடக் கொடுமையாக உள்ளது. இவை அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளோ எதையும் கண்டுகொள்ளாமல், கள்ளத்தனமாக மது விற்பவர்களுக்குச் சாதகமாகவே செயல்படுவதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
கருமத்தம்பட்டி சோமனூர் சாலையில் உள்ள மது கடை பின்புறம் அதிக விலைக்கு கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. நாளொன்றுக்கு இது மாதிரியான விற்பனையில் லட்சக்கணக்கில் பணப்புழக்கம் இருப்பதாக கூறும் அந்த பகுதி மக்கள் இதனை யார் தான் கேட்பது என வேதனை தெரிவித்தனர்.