கோயம்புத்தூர்: சரவணம்பட்டி பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் 14 வயது சிறுமியின் உடல் நேற்று (டிசம்பர் 16) கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் துணை ஆணையர் உமா இன்று (டிசம்பர் 17) செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, நேற்று சரவணம்பட்டி பகுதியில் 14 வயது பள்ளிச் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் குடும்ப நண்பரான முத்துக்குமார் (44) என்பவர் இக்கொலையைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது. சிறுமியின் தாயாருக்கும் அவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு இருந்த நிலையில் சிறுமி அணிந்திருந்த நகைக்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது.
இதனைத் தொடர்ந்து ஆதாய கொலை என்பது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் முத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி காணாமல்போன 11ஆம் தேதியே கொலைசெய்யப்பட்டுள்ளார். முத்துக்குமார் வீட்டிலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள புதரில் சிறுமியின் உடல் வீசப்பட்டிருந்தது.
கோவை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடற்கூராய்வு நடைபெற உள்ளது. பாலியல் ரீதியாக சிறுமி துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது. உடற்கூராய்வு அறிக்கையின் முடிவின் இது குறித்து உறுதியாகத் தெரியவரும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளியில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு: தமிழிசை இரங்கல்