கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் சுமார் 12 குளங்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 101. 81 கோடி ரூபாய் மதிப்பில் 347 ஏக்கர் பரப்பளவு கொண்ட உக்கடம் பெரியகுளம், ரூ. 115.16 கோடி மதிப்பில் 172 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாலாங்குளம் ஆகியவற்றின் கரைப் பகுதியை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தக் குளத்தின் கரைப் பகுதியை பலப்படுத்தி, நடைபாதை அமைத்தல், சைக்கிள் பாதை அமைத்தல், பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
மொத்தம் 5.2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பெரியகுளத்தின் அருகில், 1. 20 கிலோ மீட்டர் தூரம் கொண்ட செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள கரைப் பகுதி மேம்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது வரை குறிப்பிட்ட தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கிளாசிக் டவர் சந்திப்பில் இருந்து உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியை இணைக்கும் வகையிலும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இங்கு கரையில் இருந்து நீரில் குறிப்பிட்ட மீட்டர் தூரத்துக்கு நடந்து செல்லும் வகையில் நடைபாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு இருந்தாலும் குளத்தின் கரைகளை கான்கிரீட் சாலைகளாக மாற்றும் திட்டம் பறவை ஆர்வலர்கள், சூழலியல் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'கோவை மாநகரத்தில் குளங்களில் கரை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தக் குளங்களில் 160க்கும் மேற்பட்ட பறவை வகைகள் வந்து செல்லும், 60, 70 வகை பறவைகள் நிரந்தரமாக இருக்கும். இந்த கரைகளை காங்ரீட்டுகளாக மாற்றும் பணிகளால் பறவைகள் பாதிக்கப்படும். இவை உணவுகளை கரையில்தான் தேடும். பூச்சிகளை மட்டும் சாப்பிடும். பறவைகளுக்கு கரைகள் முக்கியம்.
தற்போது ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் வணிகமயமாக்கலால், நீர் நிலைகளில் சமநிலை பாதிக்கும், பறவைகளின் வாழ்விடம் சுருங்கிவரும் நிலையில் கரைகள் காங்கிரீட்டாக மாற்றுவதால் செயற்கையை பறவைகள் ஏற்றுக்கொள்ளாது. அதிக ஒளி தரும் விளக்குகள் பறவைகளுக்கு அபாயமானது. பறவைகள் வராவிட்டால் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் நீர் நிலையில் சமநிலை பாதிக்கும்.
இதன் காரணமாக நகரத்தில் வேறு வகையான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தக் குளத்தில் உள்ள மீன்கள், பறவைகள், தாவரங்கள் இயற்கையாகவே சமநிலையை ஏற்படுத்தும் தன்மையுடையது. அவற்றின் போக்கிலேயே அதனை விட வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 160க்கும் மேற்பட்ட வகை பறவைகள் இங்கு வந்துள்ளன. இந்த வருடம் அரசால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 50 முதல் 60 வகையான பறவையினங்கள் மட்டுமே வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பூச்சிகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வயல்வெளிகளில் இரசாயண மருந்துகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. பறவைகள் வராமல்போனால் நிலைமை இன்னும் மோசமாகும். உடனடியாக அரசு இதனை கருத்தில்கொண்டு வணிக நோக்கத்துடன் செயல்படக்கூடிய இந்தத் திட்டங்களை நிறுத்த வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளனர்
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் குளங்களை புனரமைத்து வருவதாகத்தெரிகிறது. பல்வேறு இடங்களில் புனரமைப்பு என்ற பெயரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறாமலும், சாக்கடை கழிவுநீர் உள்ளே வருவதை தடுக்காமலும் அப்படியே வைத்துக்கொண்டு குளத்தின் கரைகளை பெரிதாக்கி இயற்கையாக வளர்ந்த செடி, கொடிகளை அகற்றிவிட்டு பணிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள், 'அந்தச் செடி கொடிகளில் இருந்த பல்வேறு பறவைகளின் கூடுகள், மற்ற உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு பல்லுயிர்ச் சூழல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபாதை, சைக்கிள் பாதை, கடைகள் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இவை அனைத்தும் குளத்தை அழிக்கும் வேலையாக கருதுகிறோம்.
இவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தக் குளத்தில் பல்வேறு வகையான பறவைகள் தங்குகின்றன. அதற்கான உணவும் பாதுகாப்பும் கிடைக்கும் நம்பிக்கையில் பறவைகள் வந்து தங்குகின்றன. அதற்கான பாதுகாப்பை அகற்றிவிட்டால் பறவைகளின் வரத்து குறைந்துவிடும். குளங்களை கான்கிரீட் காடுகளாக மாற்ற வேண்டிய அவசியம் தேவையில்லை' என்றனர்.
இதையும் படிங்க... சாதி மறுப்புத் திருமணம் செய்த மகளை அடித்து இழுத்துச் செல்லும் பெற்றோர்!