பொள்ளாச்சி அருகே உள்ள சேரன் நகரில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா, நெகமம் பகுதியில் வேளாண் விரிவாக்கக் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “1972இல் திமுக தலைவராக இருந்த கலைஞர் தனது மகன் மு.க முத்து மீது உள்ள பிள்ளைப் பாசத்தால் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு அதிமுக உருவானது. அதேபோல் இன்று கலைஞர் இல்லாத நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தன் மகன் மீது உள்ள பிள்ளைப் பாசத்தால் உதயநிதி ஸ்டாலினுக்குப் பதவி வழங்கியுள்ளார்.
அன்றைக்கும் திமுக-வில் “பிள்ளையோ பிள்ளை இன்றைக்கும் பிள்ளையோ பிள்ளை” பிள்ளைப் பாசம் தமிழ்நாட்டில் இனி எடுபடாது. இதனால் அக்கட்சியில் விரைவில் பிளவு ஏற்படும். உண்மையான விசுவாசமான தொண்டர்கள் அதிமுக பக்கம் வருவார்கள்” என்று அவர் கூறினார்.