கோயம்புத்தூர்: புலியகுளம் பகுதியில் உள்ள மசால் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் என்கின்றா அயோத்தி ரவி(வயது 45). இவர் இந்து முன்னணி அமைப்பில் கோவை மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் செவ்வாய்கிழமை கோவை மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் சதீஷ் தலைமையில் தனிப்படை போலீசார், அயோத்தி ரவி வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 2 மணிநேரம் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவில் உரிமம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் சிலவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
துப்பாக்கி பறிமுதல் தொடர்பாக அயோத்தி ரவியை போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். உரிமம் இல்லாமல் துப்பாக்கி எப்படி வாங்கப்பட்டது? எதற்காக வாங்கப்பட்டது? எவ்வளவு நாட்களாக இந்த துப்பாக்கிகள் வீட்டில் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் ரவியிடம் கேள்விகள் எழுப்பியதாக கூறப்படுகிறது.
கோவையில் சமீப காலமாக ரவுடி கும்பல்கள் மோதிக் கொள்ளும் நிலையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் உரிமம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.