கோவை: தற்காப்பு பயிற்சிகள் என்பது ஒரு நபரின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் உக்கப்படுத்துவது மட்டும் அல்ல, சமூகத்தில் ஏற்படும் ஒரு சில ஆபத்துகளில் இருந்து தன்னைத்தானே பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாகும். தற்காப்புக் கலையைக் கற்பது பல நாடுகளில் கட்டாயமாக உள்ளது.
பெரும்பாலான தற்காப்புக் கலைகள் ஆயுதமற்ற தற்காப்புக் கலைகளின் வடிவத்திலேயே கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக மாணவர்களாக இருக்கும் போது இந்த தற்காப்புக் கலையைக் கற்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது என தற்காப்புக் கலை வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர்.
மேலும், இத்தகைய தற்காப்புக் கலைப் பயிற்சிகள் ஒரு நபரின் உடலை மட்டும் வலிமைப்படுத்தும் பயிற்சியாக இல்லாமல், மன நலத்திற்கும் மிகவும் இன்றியமையாததாக அமைகிறது. குறிப்பாக, பள்ளி குழந்தைகள் சிறு வயது முதல் தற்காப்புக் கலைப் பயிற்சியில் ஈடுபடும் போது கடின உழைப்பு, நேரம் தவறாமை, இக்கட்டான சூழ்நிலையிலும் சரியான முடிவெடுப்பது போன்ற பண்புகளை பெறுகின்றனர்.
அந்த வகையில், கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. மாவட்ட காவல்துறையினர் அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக மாநகர காவல்துறையினர் மாநகர பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளனர். இந்த திட்டம் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் தற்காப்பு பயிற்சிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாநகர ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சேகர் மேற்பார்வையில் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில் கோவை மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
இந்த தற்காப்பு பயிற்சிகள் இனிவரும் நாட்களில் தொடர்ந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த துவக்க விழாவில் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சேகர் உள்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 18 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மாயூரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!