உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்திருந்தாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு புத்தாண்டை வரவேற்றனர்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை மாநில அரசு தடை செய்தது. மேலும், பொது இடங்களில் பொதுமக்கள் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது.
இதனால், ஓட்டல்களிலும், பொது இடங்களிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. புத்தாண்டையொட்டி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து அலுவலர்களுடன் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அரசு உத்தரவை மீறி பல்வேறு இடங்களில் இருந்து குவிந்த இளைஞர்கள் ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டு விபத்து மற்றும் பாதுகாப்பான சாலை பயணம் குறித்து அவர்களுக்கு காவல் துறையினர் வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி ஆனதை அடுத்து புத்தாண்டு பிறந்ததை கொண்டாடும் வகையில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கினார்.
முன்னதாக ஈடிவி பாரதத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா, “இந்த ஆண்டு அனைவருக்கும் பாதுகாப்பான வெற்றிகரமான புத்தாண்டாக அமைய வாழ்த்துகள். கரோனா போன்ற பேரிடர்கள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய ஆண்டாக அமைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...2020 - தமிழ்நாடு ஒரு பார்வை