கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம் . அந்த வகையில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த நாராயணசாமி (வயது 55) என்பவர் அவரது அக்கா உயிரிழந்ததற்கு உறவினர்களுடன் பேரூரில் திதி கொடுக்க வந்துள்ளார். திதி கொடுத்துவிட்டு காலபைரவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென சன்னதியிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவசரகால மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை அடுத்து பேரூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்திய பின்பு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
கோயில் வளாகத்திலேயே ஒருவர் உயிரிழந்ததால் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர் ஆகம விதியின் படி பூஜை செய்யப்பட்டு பின்னர் நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் வாயிலியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஊரை மிரட்டும் சுள்ளி கொம்பன் யானை - மின் வேலிக்குள் புகுந்து அட்டகாசம்!