புத்தாண்டை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தனியார் உணவு விடுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, நள்ளிரவு 12 மணியளவில் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் புத்தாண்டை இளைஞர்கள் வரவேற்றனர். அவிநாசி சாலையில் லட்சுமி மில்ஸ் அருகே உள்ள அண்ணா சிலை சந்திப்புப் பகுதிகளில் குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் வாகனங்களில் ஊர்வலமாக வந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டதுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இளைஞர்கள் சிலர் சாலை தடுப்புகளில் நின்றுகொண்டும் சாலையின் நடுவிலும் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க அனைத்து சிக்னல்களிலும் காவல் துறையினர் நிறுத்தப்பட்டு, வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தினர்.
மேலும் மது அருந்தி வந்த இளைஞர்களை தனியாக அழைத்துச் சென்று அதற்கென அமைக்கப்பட்ட பந்தலில் அமர வைத்து மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூறி புத்தாண்டு பிறந்தவுடன் அவர்களுக்கு துணை ஆனையர் பாலாஜி சரவணன் கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்தா. மேலும் கோவையிலுள்ள தேவாலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதேபோல், கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள நூற்றாண்டு பழமையான புனித மைக்கேல் தேவாலயத்தில் கோவை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டை போற்றும் விதமாக பாடல்களும் பாடப்பட்டன.
இதனிடையே, உக்கடம் பேருந்து நிலையம் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். மேலும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றும் தேசிய கொடியை கையில் ஏந்தியும் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பட்டன. இரவு 11:30 மணிக்கு தொடங்கிய இப்போராட்டமானது 12:15 மணி வரைக்கும் நடைபெற்றது. ஊரே புத்தாண்டை வரவேற்று பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடி வந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தினர்.
இதையும் படிங்க: