நேபாள நாட்டைச் சேர்ந்தவர் சந்தேஷ் நிபானி. இவர், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி பயிரியல் துறையில் முதுகலைப் பட்டம் பயின்றுவந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை வெகுநேரம் ஆகியும் சந்தேஷ் தன் அறையைவிட்டு வெளிவரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக விடுதி மாணவர்கள் சந்தேஷ் தங்கியிருந்து அறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.
அப்போது, சந்தேஷ் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இதுபற்றி விடுதி காப்பாளரிடம் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் விடுதி காப்பாளர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர் சந்தேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து, மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பல்கலைக்கழக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.