மனிதனை மட்டுமல்லாது மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் என அனைத்து நிகழ்வுகளையும் இசை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
ஆனால் இந்த கரோனா ஊரடங்கால் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டதால், இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் இசை கலைஞர்கள் வாடி வதங்கி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் ஒப்பாரி ராகமானது. இசைக்கலைஞர்கள் மட்டுமல்லாமல் இசை வகுப்புகள் நடக்கும் ஆசிரியர்களும் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 500க்கும் மேற்பட்ட ஆர்கெஸ்ட்ரா குழு கலைஞர்கள், கோயில் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றை நம்பியே வாழ்க்கையை நடத்தி வந்தனர். மாதம் 12 முதல் 15 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வந்த இவர்கள் தற்பொழுது எவ்வித வருமானமும் இல்லாமல் அரசு வழங்கும் ரேஷன் பொருள்களை கொண்டே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை புதூர் பகுதியில் உள்ள கோயிலின் முன்புறம் அமர்ந்து இசைக்கருவிகளை வாசித்து தமிழ்நாடு அரசு தங்களின் வாழ்வாதாரம் காக்க உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதையும் படிங்க: 'மாணவர்களுக்கு பாடம் நடத்தும் வாய்ப்பாவது கொடுங்கள்' - வேதனையில் பம்பை இசைக் கலைஞர்கள்!