கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியை இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் கோவை மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆட்சியரிடம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.நடராஜன்,
கோவையில் கடுமையான குடிநீர் பஞ்சம் இருப்பதால் குடிநீர் பஞ்சத்தை போக்க தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜீவா நகர் பகுதியில் நீண்டகாலமாக வசித்துவரும் மக்களை மொத்தமாக அப்புறப்படுத்தாமல், குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்புகளுக்கு இடம் பெயர்பவர்களை மட்டும் அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் கோவை நகரத்திற்குள் அதிகமாக நடந்துவரும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கண்காணிப்பு பணியை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார். இதுதவிர கோவை பீளமேடு பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.