கோவையை அடுத்த வீரகேரளம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு, மன்னார்குடியைச் சேர்ந்த அஞ்சலி என்பவர் நேற்று வந்துள்ளார். கர்ப்பிணியான அஞ்சலிக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனையடுத்து வேடப்பட்டியில் உள்ள தனியார் கிராமப்புற மருத்துவமனையில் அஞ்சலி அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவம் பார்க்க டாக்டர் இல்லாத காரணத்தால், அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பிறகு மருத்துமனையை விட்டு வெளியேறிய அஞ்சலி பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார். நிலைமையை உணர்ந்த மருத்துவனையின் அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் லட்சுமி என்ற மூதாட்டி, அஞ்சலிக்கு வேடபட்டி தொண்டாமுத்தூர் சாலையோரத்தில் படுக்க வைத்து பிரசவம் பார்க்க முன்வந்தார். இதற்கு அப்பகுதியில் உள்ள பெண்களும், அஞ்சலியை சுற்றி நான்குபுறமும் சேலையால் மறைத்து நின்று உதவினர். வலியால் துடித்த அஞ்சலிக்கு, மூதாட்டி பிரசவம் பார்த்தார். இறுதியில், அஞ்சலிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
சாலையில் குழந்தை பிறந்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்த செவிலியர்களுடன், அப்பகுதிமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாதது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து தாயும், சேயும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால், சாலையோரத்தில் கர்ப்பிணிக்கு மூதாட்டி பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.