கோயம்புத்தூர்: கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் உள்ள தன்னாசி ஆண்டவர் கோயில், கோலமாவு மலைப்பகுதியில் கடந்த நவம்பர் மாதம் முதல் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தைப் புலி ஒன்றின் நடமாட்டம் இருந்து வந்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் சிறுத்தை புலியைப் பிடிக்க 2 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் தனியார் குடோனில் சிறுத்தை இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடோன் ஊழியர் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, வனத்துறையினர் து குடோன் முழுவதும் இருந்த ஓடுகளில் வலை விரித்தனர். வெளியே செல்ல உள்ள 2 வழிகளிலும் வனத்துறையினர் சிறுத்தை புலியைப் பிடிக்கக் கூண்டு வைத்துள்ளனர். கூண்டில் இறைச்சி வைக்கப்பட்டு அதனைச் சுற்றியும் வலை அமைக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர் குழுவினர் வந்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க முடியுமா என ஆய்வு செய்தபோது அதில் சிக்கல் இருப்பது தெரிய வந்ததால், சிறுத்தை தானாக கூண்டில் சிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர். சிறுத்தை புலியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கக் கூண்டுகளுக்கு அருகே இரவுநேர கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராவில் இன்று அதிகாலை சிறுத்தைப் புலி கூண்டை நோக்கி நெருங்கி வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகளை தற்போது வனத்துறை அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் கோவை மண்டல வனக்காப்பாளர் ராமசுப்பிரமணியம் சிறுத்தை புலி பதுங்கி உள்ள கூட குடோனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தற்போது குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தை புலி ஏற்கனவே குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்து நாய்களை வேட்டையாடியது என்பதை வனக்கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாகவும், இது 3 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை புலியாக இருக்கக் கூடும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இன்று இரவுக்குள் கூண்டில் சிறுத்தை பிடிபடும் என நம்பிக்கை தெரிவித்த அவர், பாழடைந்த குடோனில் பதுங்கி உள்ளதால் மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதில் சிக்கல் உள்ளது எனவும், அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்தார். சிறுத்தை புலி பிடிபட்ட பிறகு அதன் உடல் நலத்தைக் கண்காணித்த பின்னர் அதனை, கோவை மாவட்டத்தில் உள்ள அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட முடிவு செய்துள்ளதாகவும் கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2 மாதமாக சிக்காத சிறுத்தை.. வனத்துறையினர் விரித்த வலையில் சிக்குமா?