கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி வளையபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகின்றார்.
இவர் சிறுவர்களின் ஆபாசப் படங்களை இணையதளத்தில் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்து வருவது சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கருமத்தம்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நேற்று காலை வீட்டிலிருந்த ரங்கநாதனை கருமத்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறார் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்து, வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் பகிர்ந்து வந்தது உறுதிசெய்யப்பட்டது.
மேலும், முகநூலில் போலிக் கணக்கு தொடங்கி அதில் ஆபாச காணொளிகளைப் பகிர்ந்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் அவரை நீதிபதி இல்லத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், வாட்ஸ்ஆப் குழுக்களில் உறுப்பினராக இருந்தவர்கள் யார் யார் என்பது குறித்தும் அவர்கள் இந்த ஆபாச காணொளிகளை வேறு யாருக்கெல்லாம் பகிர்ந்து இருக்கின்றனர் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்