கோவை: கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர்ஸ் அசோசியேஷன் (Coimbatore Hostel Owners Association) நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், "சரக்கு மற்றும் சேவை வரி பிரிவினர் ஹாஸ்டல்களில் ரெய்டு நடத்தி பெரிய தொகையை வரியாக செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றனர். ஹோட்டல்களுக்கு உண்டான வரியை, ஹாஸ்டல்களுக்கும் செலுத்தும்படி வற்புறுத்துகிறார்கள்.
ரெய்டு என்ற பெயரில் ஹாஸ்டல்களில் உள்ள அலுவலர்கள் மற்றும் தங்கியுள்ள பெண்களிடமும் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். எனவே, ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாஸ்டல்களில் ரெய்டு நடத்தி வரி வசூலிப்பதை உடனடியாக நிறுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரிகள் செலுத்த நேரிட்டால், அதுதொடர்பாக எங்களுக்கு முறையாக தெரிவித்து, பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டும் வரை, வரி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹாஸ்டல் உரிமையாளர்கள், "சோதனை என்ற பெயரில் நேரம் குறிப்பிடாமல் பெண்கள் இருக்கும் ஹாஸ்டல்களில் நுழைவது ஏற்புடையது அல்ல. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவின் நகலை, முதலமைச்சர், மத்திய நிதி அமைச்சர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், வணிகவரித்துறை ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளோம்" என்று கூறினர்.
இதையும் படிங்க: சென்னையில் நகைக்கடை ஷட்டரை உடைத்து 9 கிலோ தங்கம் கொள்ளை!