கோயம்புத்தூர்: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகரங்களில் பெரு நகரமாக உருவெடுத்து வருகிறது. இங்கு உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னைய தவிர்த்து மெட்ரோ ரயில் திட்டம் வேறு நகரங்களில் செயல்படுத்தப்படவில்லை.
வளர்ந்து வரும் நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை, வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செலவதற்கான ஒரு உந்துகோலாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கோவை நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க அரசு நகர போருந்துக்களின் தரத்தை கூட்டவும் பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் பயணிக்கவும் தமிழக அரசு பேருந்துகளில் சில முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது. அரசு நகர பேருந்துகளில் பயணிகளின் நலன் கருதி பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கும் புதிய திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக, கோவை மாநகரின் உக்கடம் மற்றும் காந்திபுரம் பகுதிகளில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு நாள்தோறும் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலன் கருதி ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் ஒலிபெருக்கியில் பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும் திட்டத்தை போக்குவரத்து துறை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், கோவை மாநகரில் முதன்முறையாக மாநகர பேருந்தில் இதற்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. காந்திபுரத்தில் இருந்து காரணம் பேட்டை செல்லும் நகர பேருந்து 19c-யில் ஜி.பி.எஸ் கருவி மூலம் பேருந்து நிறுத்தத்தை முன் கூட்டியே அறிவிக்கும் முறையை சோதனை முறையில் அதிகாரிகள் அமல்படுத்தி உள்ளனர்.
நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் இடைவெளியில் சம்பந்தப்பட்ட நிறுத்தத்தின் அறிவிப்பு ஒலிப்பெருக்கியில் வருமாறு வடிவமைத்து உள்ளனர். இதன் தொடர்சியாக இந்த திட்டத்தில் உள்ள குறை நிறைகளை கண்டறிந்து அனைத்து பேருந்துகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், திருக்குறளின் பெருமையை பறைசாற்றும் வகையிலும் அதன் மேன்மையை மக்களிடத்தில் உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு நிறுத்தத்தின் இடையே திருக்குறளும் அதன் விளக்கமும் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் பயணிகளின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து உள்ளது. இத்திட்டத்தினால் பலர் பயனடைவதாகவும், இறங்கும் இடம் வரும் முன்னரே பதற்றமின்றி இறங்க தயாரகிக் கொள்ள முடிகிறது என்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் மக்களிடையில் திருக்குறளின் ஒலிப்பு கூடுதலாக வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இதில் உள்ள சிறு சிறு குறைபாடுகள் தீர்க்கப்பட்டு விரைவில் அனைத்து நகர பேருந்துகளிலும் இந்த முறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. முழுமையாக இத்திட்டத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அனைத்து சோதனைகள் முடிந்த பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் இத்திட்டத்தை துவங்கி வைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டின் சாபக்கேடு அமைச்சர் செந்தில் பாலாஜி' - பாமக பொருளாளர் திலகபாமா விளாசல்