கோவை மாவட்டத்தில் வரும் 19ஆம் தேதி முதல் வஉசி மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை ஓவியக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
இதற்கான ஏற்பாடுகள் வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்தும் முதல்வரின் பாதுகாப்பு விவரங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கண்காட்சியை முதல்வர் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து ரெசிடென்சி அரங்கில் தொழில்முனைவோர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக 18ஆம் தேதி கோவைு வரும் முதல்வரின் வருகையை ஒட்டி 10 இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலைக்குள் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முடிவடைந்து விடும். இந்த சிறப்பு ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி 10 நாட்கள் நடைபெற உள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் இந்த கண்காட்சியை கண்டு களிக்கலாம் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் மாநகர காவல் ஆணையாளர் மாநகராட்சி ஆணையர் மற்றும் கோவை மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் - இந்தியத் தேர்தல் ஆணையம்