கோயம்புத்தூர் : மருதமலை மற்றும் தடாகம் வனப்பகுதியில் இப்போது அதிக அளவிலான யானைகள் நடமாட்டம் இருக்கிறது. இந்த யானைகள் தடாகம் வனப்பகுதியில் இருந்து மருதமலை வனப்பகுதிக்கும் மருதமலை வனப்பகுதியில் இருந்து தடாகம் வனப்பகுதிக்கும் அவ்வப்போது இடம் பெயர்ந்து வருகின்றன.
இதில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வரும் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு வருவது வழக்கம். இதில் சில யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீடுகளில் வைக்கப்பட்டு இருக்கும் அரிசியை சாப்பிடுவது தொடர்ந்து வருகிறது. விவசாயப் பயிர்களைக் காட்டிலும் அரிசியை உண்பதை, ஒரு சில யானைகள் வழக்கமாக கொண்டுள்ளன. இதில் குட்டியுடன் வரக்கூடிய தாய் யானை தொடர்ந்து குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அரிசியைச் சாப்பிட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஐஓபி காலனி பகுதியில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் பழங்களை அந்த யானைகள் சாப்பிட்ட நிலையில் ரேஷன் கடையை உடைத்தும் அரிசியை சாப்பிட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை மருதமலை கோவிலில் அருகே உள்ள லெப்ரசி காலனியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது.மேலும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசியை சாப்பிட முயன்றதால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் அப்பகுதி மக்கள் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கடந்த 10 நாட்களாகவே யானையின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களுக்குள், புகுந்து பயிர்களை சாப்பிடுவதோடு மட்டுமில்லாமல் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், தாய் மற்றும் குட்டி யானை குடியிருப்புப் பகுதிகளையும் ரேஷன் கடைகளையும் உடைத்து அரிசியை சாப்பிட்டு வருகிறது. இரவு நேரத்தில் வீட்டில் தூங்குவதற்கு அச்சமாக உள்ளது. எப்போது யானை வந்து கதவை உடைக்கும் என்ற அச்சத்திலேயே இரவு முழுவதும் உறங்காமல் பயத்துடன் இருக்கிறேன்’ என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் குடியிருப்புப் பகுதிக்குள் யானைகள் வராதவாறு வனத்துறையினர் யானைகளை விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மூன்றாமிடம்; ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் சாதனை!