கோவை: வால்பாறை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்களைத் தடுக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கிராமப்பொதுமக்கள், பள்ளி - கல்லூரி மாணவ மாணவிகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வால்பாறை காவல் நிலையங்களுக்கு உட்பட்டப் பகுதிகளில் 90-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 127 பேர் மீது போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் போதை வஸ்துக்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசர் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 74-வது குடியரசு தினத்தன்று கஞ்சா மட்டும் போதைப்பொருட்கள் இல்லாத கிராமமாக தாத்தூர் ஊராட்சியை போலீசார் தேர்ந்தெடுத்து உள்ளனர். குடியரசுத் தினத்தை முன்னிட்டு கிராமத்தில் போலீசார் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் கலந்து கொண்டு பேசிய கோவை சரக காவல்துறை துணை தலைவர் விஜய்குமார், போதைப் பொருள் இல்லாத கிராமமாக தாத்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஆனைமலை துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று சிறந்த ஊராட்சியாக குடியரசுத் தலைவரால் தாத்தூர் ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Erode east By poll: அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த் அறிவிப்பு!