கோவை: கடந்த திங்கட்கிழமை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்த கோகுல் என்பவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர். அதை தடுக்க முயன்ற மனோஜ் என்பவர் மீதும் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கோகுலின் நண்பர் மனோஜ் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கொலை செய்தவர்கள் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்ததில் அவர்கள் நீலகிரியில் இருப்பதை அறிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். தகவலையடுத்து நீலகிரியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 7 பேரை விசாரித்தபோது, அவர்கள் கோகுல் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் 7 பேரையும் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் போலீஸ் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க முயன்ற கௌதம் மற்றும் ஜோஸ்வா ஆகிய இரண்டு பேர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவரும் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை மீதமுள்ள ஐந்து பேரும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்றில் நீதிபதி கிருத்திகா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்ட டேனியல், அருண், ஹரி என்கிற கெளதம், பரணி செளந்தர், சூர்யா ஆகியோரை விசாரித்த நீதிபதி 5 பேருக்கும் வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மனநலம் பாதித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை; தனியார் ஆசிரமத்தில் இருந்தவர்கள் மீட்பு